டி20 உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்காவை வெளியேற்றியது நெதர்லாந்து!
டி20 உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, அந்த அணியின் அரையிறுதிக் கனவை தவிடுபொடியாக்கியது.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற முக்கியமான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
அடிலெய்டில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. இப்போட்டியில் வெற்றிபெற்றால் தென் ஆப்பிரிக்க அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்ற நோக்குடன் விளையாடியது.
Trending
அதன்படி களமிறங்கிய நெதர்லாந்து அணிக்கு ஸ்டீபன் மைபர்க் - மேக்ஸ் ஓடவுட் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தது. இதில் ஓடவுட் 29 ரன்களில் ஆட்டமிழக்க, மைபர்க்கும் 37 ரன்களோடு பெவிலியன் திரும்பினார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த டாம் கூப்பர் - அக்கர்மேன் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அக்கர்மேன் 41 ரன்களிலும், டாம் கூப்பர் 35 பந்துகளில் ஆட்டமிழந்தனர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்களைச் சேர்த்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் கேசவ் மஹாராஜ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணியில் குயின்டன் டி காக் 13 ரன்களிலும், டெம்பா பவுமா 20 ரன்களிலும் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
பின்னர் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரைலி ரூஸோவ் 25 ரன்கள், ஐடன் மார்க்ரம் 17, டெவிட் மில்லர் 17, ஹெண்ட்ரிச் கிளாசென் 21 ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, தென் ஆப்பிரிக்க அணியின் அரையிறுதி கனவும் தகர்ந்தது.
இறுதியில் கடைசி வரை போராடிய கேசவ் மஹாராஜ் - காகிசோ ரபாடா ஆகியோராலும் இலக்கை எட்டமுடியாத காரணத்தால், 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணியால் 8 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்களை மட்டுமே எடுத்தது. நெதர்லாந்து தரப்பில் பிராண்டன் குளோவர் 3 விக்கெட்டுகளையும், பாஸ் டி லீட், ஃபெரட் கிளாசென் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதன்மூலம் நெதர்லாந்து அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றதுடன், தென் ஆப்பிரிக்க அணியின் அரையிறுதிக் கனவையும் தவிடுபொடியாக்கி அந்த அணிக்கு அதிர்ச்சியளித்தது.
Win Big, Make Your Cricket Tales Now