-mdl.jpg)
உலகில் உள்ள அனைத்து முன்னணி கிரிக்கெட் அணிகளும் வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் தங்களது நாட்டுக்காக விளையாடப் போகும் தரமான வீரர்களை கண்டறிவதற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த வருடம் விராட் கோலி தலைமையில் துபாயில் நடந்த டி20 உலக கோப்பையில் பரம எதிரியான பாகிஸ்தானிடம் வரலாற்றில் முதல் முறையாக தோல்வியடைந்து லீக் சுற்றுடன் நடையை கட்டிய இந்தியா, இம்முறை புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள ரோகித் சர்மா தலைமையில் களமிறங்குகிறது.
முழுநேர கேப்டனாக பொறுப்பேற்ற பின் நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை போன்ற அணிகளை சொந்த மண்ணில் அவரது தலைமையில் துவம்சம் செய்த இந்தியா சமீபத்தில் வலுவான இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ வைத்து 2 – 1 (3) என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியது. இதை அடுத்து வெஸ்ட் இண்டீசில் முதலில் நடைபெறும் ஒருநாள் தொடரில் ஓய்வெடுத்தாலும் அடுத்ததாக நடைபெறும் டி20 தொடரில் அவர் கேப்டனாக மீண்டும் திரும்புகிறார்.
அந்த வகையில் இந்த 6 மாத காலத்தில் கேஎல் ராகுல், ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா போன்ற முதன்மை வீரர்களை தவிர்த்து புவனேஸ்வர் குமார், சூரியகுமார் யாதவ், ஹர்ஷல் படேல் போன்ற தரமான வீரர்கள் டி20 உலக கோப்பையில் விளையாடும் அளவுக்கு சமீபத்திய தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு ரோஹித் சர்மா – ராகுல் டிராவிட் தலைமை கூட்டணியிடம் தங்களது திறமையை வெளிப்படுத்தி நம்பிக்கையைப் பெற்றுள்ளார்கள்.