
நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த தென் ஆப்ரிக்கா அணி அரையிறுதி வாய்ப்பையும் இழந்து வெளியேறியுள்ளது. டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 40வது போட்டியில் நெதர்லாந்து அணியும், தென் ஆப்ரிக்கா அணியும் மோதின. ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அகெர்மன் 41 ரன்களும், மெய்பர்க் 37 ரன்களும் எடுத்தனர். இதன்பின் 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணி பேட்டிங்கில் கடுமையாக சொதப்பியது. டேவிட் மில்லர், டி காக் என தென் ஆப்ரிக்கா அணியின் அனைத்து பேட்ஸ்மேன்களும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கூட ரன் எடுக்காமல் விக்கெட்டை இழந்து அடுத்தடுத்து வெளியேறியதால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் மட்டுமே எடுத்த தென் ஆப்ரிக்கா அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
நெதர்லாந்து அணி சார்பில் அதிகபட்சமாக க்ளோவர் 3 விக்கெட்டுகளையும், லீட் மற்றும் கிளாசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். நெதர்லாந்து அணிக்கு எதிரான இந்த தோல்வியின் மூலம் தென் ஆப்ரிக்கா அணி அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியுள்ளது. இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. பாகிஸ்தான் – வங்கதேசம் இடையேயான போட்டியின் முடிவே குரூப் 2 பிரிவின் இரண்டாவது அரையிறுதி போட்டியாளரை தீர்மானிக்கும்.