
ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் டி20 உலகக் கோப்பை 2022 தொடரின் அரையிறுதி சுற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி, பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிட்டது. இன்று நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி, வரும் ஞாயிறு அன்று இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்து களமிறங்கும்.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பொறுத்தவரையில் பேட்டிங்கில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் சிறந்த பார்மில் உள்ளனர். விராட் கோலி 5 ஆட்டங்களில் 3 அரை சதங்களுடன் 246 ரன்கள் விளாசி அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக மெல்பர்னில் நடைபெற்ற ஆட்டத்தில் 90 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் விராட் கோலி விளாசிய 82 ரன்கள் பிரம்மிக்க வைத்தன.
சூர்யகுமார் யாதவ் 3 அரை சதங்களுடன் 225 ரன்கள் விளாசி 3ஆவது இடம் வகிக்கிறார். ஜிம்பாப்வேக்கு எதிராக சூர்யகுமார் 360 டிகிரி கோணத்தில் சுழன்று அடித்து 25 பந்துகளில் 61 ரன்கள் விளாசியது வியக்க வைத்தது. அதேவேளையில் தொடக்க ஆட்டங்களில் பார்மின்றி தவித்த கேஎல் ராகுல் கடைசி ஆட்டங்களிலும் அரை சதம் விளாசி பார்முக்கு திரும்பி இருப்பது அணியின் பலத்தை அதிகரித்துள்ளது.