
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த நடப்பு சீசன் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் லாரா வோல்வார்ட் தலைமையிலான தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி சோஃபி டிவைன் தலைமையிலான நியூசிலாந்து அணியானது முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது மகளிருக்கான புதுப்பிக்கப்பட்ட டி20 தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி பேட்டர்களுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் பெத் மூனி முதலிடத்திலும், தஹ்லியா மெக்ராத் இரண்டாம் இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட் 3 ஆம் இடத்திலும் தொடர்கின்றனர். இந்த பட்டியலில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 5ஆம் இடத்தில் தொடர்கிறார்.
அதேசமயம் நியூசிலாந்து அணியின் சூஸி பேட்ஸ் ஒரு இடம் முன்னேறி 7ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். மேலும் இத்தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென் ஆப்பிரிக்க அணியின் அன்னேக் போஷ் 7 இடங்கள் முன்னேறி 13ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த பட்டியலில் இந்திய வீராங்கனைகள் ஹர்மன்ப்ரீத் கவுர் 11ஆம் இடத்திலும், ஷஃபாலி வர்மா 12ஆம் இடத்திலும் தொடர்வது குறிப்பிடத்தக்கது.