இந்தியாவுக்கு எதிராக ஒவ்வொரு முறையும் இப்படி தான் நிகழ்கிறது - ஷாகிப் அல் ஹசன்!
டி20 உலக கோப்பையில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் டஸ்கின் அகமதுவுக்கு தொடர்ச்சியாக 4 ஓவர்கள் கொடுத்தது குறித்து வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் விளக்கமளித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 12 சுற்றில் 35ஆவது போட்டி அடிலெய்டில் இன்று நடைபெற்றது. இதில், இந்தியா - வங்கதேச அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி களமிறங்கி விளையாடியது.
வங்கதேசம் 7 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் குவித்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டத்தால் ஆட்டம் தடைபட்டது. பின்னர், மழைநின்றதையடுத்து சில நிமிட இடைவெளிக்கு பின் ஆட்டம் மீண்டும் தொடங்கியது. ஆனால், ஆட்டம் 16 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
Trending
டக்ஒர்த் லூயிஸ் விதிப்படி, வங்கதேச அணி 16 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று நிர்ணயிக்கப்பட்டது. அந்த வகையில், ஏற்கனவே 7 ஓவரில் 66 ரன்கள் எடுத்திருந்ததால் இன்னும் 54 பந்துகளில் 85 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் வங்கதேச அணி களமிறங்கியது.
ஆனால், இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சில் வங்கதேசம் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில், 16 ஓவர்கள் முடிவில் வங்காளதேச அணி 6 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், வங்காளதேச அணியை 5 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி திரில் வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ள இந்திய அணி அரையிறுதி சுற்று வாய்ப்பையும் கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டது. இந்நிலையில், போட்டி நிறைவடைந்த பின்னர் வர்ணனையாளரிடம் வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன் பேட்டியளித்தார்.
அப்போது பேசிய ஷாகிப் அல் ஹசன், “இந்தியாவுக்கு எதிராக நாங்கள் விளையாடும்போது இது தான் எங்கள் கதையாக உள்ளது. நாங்கள் வெற்றியை கிட்டத்தட்ட நெருங்கிவிட்டோம் ஆனால் வெற்றிக்கோட்டை கடக்க முடியவில்லை. இரு அணிகளும் இந்த போட்டியை மகிழ்ச்சியுடன் விளையாடின. இது சிறந்த போட்டி. அது தான் எங்களுக்கு வேண்டும். கடைசியில் யாரேனும் ஒருவர் வெற்றிபெறவேண்டும் யாரேனும் ஒருவர் தோல்வியடையவேண்டும். லிட்டன் தாஸ் எங்கள் அணியின் சிறந்த பேட்ஸ்மென்.
அவர் பவர்பிளே ஓவரில் விளையாடிய ஆட்டம் குறுகிய தூரம் பவுண்டரி எல்லையை கொண்ட இந்த மைதானத்தில் இந்த இலக்கை நாங்கள் எட்டிவிடலாம் என்று நம்பிக்கை அளித்தது. இந்தியாவின் தொடங்க வீரர்கள் 4 பேரை பார்க்கும்போது அவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். இந்திய அணியின் முதல் 4 வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்துவது எங்கள் இலக்காக இருந்தது. ஆகையால் தான் தஷ்கினை நாங்கள் தொடர்ந்து பயன்படுத்தினோம்.
எதிர்பாராதவிதமாக, அவர் விக்கெட்டை வீழ்த்தவில்லை ஆனால், ரன்களை கட்டுப்படுத்தினார். நாங்கள் மிகவும் நிதானமாக இருக்கிறோம். இந்த உலகக்கோப்பையில் நாங்கள் கிரிக்கெட் குறித்து அதிகம் பேசவில்லை. எங்களுக்கு இன்னும் ஒரு போட்டி எஞ்சியுள்ளது. நாங்கள் அதில் கவனம் செலுத்த உள்ளோம்” என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now