
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. குரூப் ஒன்றிலிருந்து நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளும், க்ரூப் இரண்டிலிருந்து இந்தியா, பாகிஸ்தான் அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின. குரூப் 2இல் தென் ஆப்பிரிக்க அணி கடைசி போட்டியில் நெதர்லாந்திடம் அதிர்ச்சி தோல்வியடைந்து 5 புள்ளிகளுடன் சூப்பர் 12 சுற்றை முடித்ததால் பாகிஸ்தான் ரூட் கிளியர் ஆனது. அந்த கடைசி வாய்ப்பை பயன்படுத்தி வங்கதேசத்தை வீழ்த்தி 6 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறியது பாகிஸ்தான் அணி.
குரூப் 2ல் புள்ளி பட்டியலில் 2ம் இடத்தை பிடித்த பாகிஸ்தான் அணி, அரையிறுதியில் குரூப் 1ல் முதலிடத்தில் உள்ள நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. வரும் 9ம் தேதி அடிலெய்டில் நடக்கும் முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தும் பாகிஸ்தானும் மோதுகின்றன. பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், அரையிறுதிக்கு முன்னேறிய மற்ற அணிகளை பாகிஸ்தானை காட்டி மிரட்டுகிறார் அந்த அணியின் ஆலோசகர் மேத்யூ ஹைடன்.
பாகிஸ்தான் அணி டி20 உலக கோப்பைக்கு வரும்போது டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான பாபர் அசாம், முகமது ரிஸ்வான் ஆகிய இருவரையுமே அதிகமாக சார்ந்திருந்தது. மிடில் ஆர்டர் பலவீனமாக இருந்தது. அதுவே பெரிய பின்னடைவாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாபர் ஆசாமும், ரிஸ்வானும் தான் ஒழுங்காக விளையாடவில்லை. ஃபகர் ஸமானுக்கு மாற்று வீரராக அணியில் எடுக்கப்பட்ட முகமது ஹாரிஸ் கடைசி 2 போட்டியில் அதிரடியாக விளையாடி மிரட்டினார். ஷான் மசூத், ஷதாப் கான், இஃப்திகார் அகமது ஆகியோரும் சிறப்பாக ஆடிவருகின்றனர்.