
SA vs NZ, Tri-Series Final: முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து வீரர்கள் டெவான் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் 47 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர்.
தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் தற்சமயம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணிக்கு எதிராக முத்தரப்பு டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டிம் செஃபெர்ட் - டெவான் கான்வே அணி சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர்.
இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 75 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் டிம் செஃபெர்ட் 30 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து டெவான் கான்வேவும் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 47 ரன்களிலும் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர். மேற்கொண்டு களமிறங்கிய மார்க் சாப்மேன் 3 ரன்களிலும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரச்சின் ரவீந்திராவும் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 47 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் இணைந்த டேரில் மிட்செல் - மைக்கேல் பிரேஸ்வெல் இணை அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.