விஜய் ஹசாரே கோப்பை: தொடர்ச்சியாக நான்காவது வெற்றியைப் பதிவுசெய்தது தமிழ்நாடு!
ஹரியானா அணிக்கெதிரான விஜய் ஹசாரே கோப்பை தொடரில் தமிழ்நாடு அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இந்தியாவின் பாரம்பரிய மிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் எலைட் குருப் அணிகளுக்கு இடையேயான ஐந்தாம் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அலூரில் நடைபெறும் ஆட்டத்தில் தமிழ்நாடு - ஹரியாணா அணிகள் மோதின. இந்த வருட விஜய் ஹசாரே போட்டியில் பிகாருக்கு எதிரான தமிழக அணியின் முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. அடுத்த ஆட்டத்தில் ஆந்திராவை எளிதாக வீழ்த்தியது தமிழக அணி. 3ஆவது ஆட்டத்தில் சத்தீஸ்கர் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 4ஆவது ஆட்டத்தில் கோவா அணியை 57 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
Trending
இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹரியாணா அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. தமிழக அணிக்குச் சிறப்பான தொடக்கத்தை அளித்து வரும் சாய் சுதர்சன் - ஜெகதீசன் ஜோடி இன்றும் அபாரமாக விளையாடினர். இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 151 ரன்கள் சேர்த்தார்கள். பின் சாய் சுதர்சன் 67 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.
கடந்த மூன்று போட்டிகளிலும் சதமடித்த ஜெகதீசன் இன்றும் சதம் அடித்து சாதனை நிகழ்த்தினார். அவர் 123 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 128 ரன்கள் எடுத்தார். லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டியில் தொடர்ச்சியாக 4 சதங்கள் எடுத்த 4ஆவது வீரர் என்கிற பெருமையை அடைந்தார்.
இதற்கு முன்பு குமார் சங்கக்காரா, அல்விரோ பீட்டர்சன், தேவ்தத் படிக்கல் ஆகியோர் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 4 சதங்கள் எடுத்துள்ளார்கள். இதன்மூலம் தமிழ்நாடு அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 284 ரன்கள் எடுத்தது. ஷாருக்கான் 46 ரன்கள் எடுத்தார். இந்திய அணிக்காக விளையாடிய மோஹித் சர்மா, ஐபிஎல் நட்சத்திரம் ராகுல் திவேத்தியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஹரியான அணியில் கடந்த போட்டியில் சதமடித்த சைத்தன்யா பிஷ்னோய், யுவராஜ் சிங் ஆகியோர் தலா ஒரு ரன்னுடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அவரைத் தொடர்ந்து வந்த ஹிமான்ஷு ரானா, யாஷு சர்மா, ஜெயந்த் யாதவ், நிஷாந்த் சிந்து, கபில் ஹூடா ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர்.
அதன்பின் களமிறங்கிய ராகுல் திவேத்தியா மட்டும் 34 ரன்களை எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் 28.3 ஓவர்களில் ஹரியானா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 133 ரன்களை மட்டுமே எடுத்தது.
தமிழ்நாடு அணி தரப்பில் பாபா அபாரஜித் 3 விக்கெட்டுகளையும், சந்தீப் வாரியர், முகமது, சோனு யாதவ் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதன்மூலம் தமிழ்நாடு அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் ஹரியானா அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.
Win Big, Make Your Cricket Tales Now