
நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி லீக் போட்டிகள் வரும் மார்ச் 31ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இறுதிப்போட்டி மே 28ஆம் தேதியன்று நடைபெறும் எனக்கூறப்பட்டுள்ளது. இந்த முறை ஹோம் மைதானத்தில் விளையாட வாய்ப்பு கொடுக்கப்பட்டிருப்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இதற்காக அனைத்து அணிகளும் படு தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் தான் ஐபிஎல் தொடங்குவதற்கு முன்னதாகவே ஒரு பிரச்சினை உருவாகியுள்ளது. அதாவது ஐபிஎல் நிறுவனத்தின் டைட்டில் ஸ்பான்சராக உள்ள டாடா நிறுவனம் விலகிக்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 2023ம் ஆண்டு தொடர் முடிந்தவுடன் மேலும் ஸ்பான்சர் செய்ய விருப்பமில்லை என டாடா நிறுவனம் முடிவெடுத்துவிட்டது. இதனை பிசிசிஐ-யிடமும் கூறிவிட்டதாக தெரிகிறது.
டாடா நிறுவனம் தற்போது மகளிர் ஐபிஎல் தொடருக்கான ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தை போட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு மகளிர் ஐபிஎல் தொடர் டாடாவின் பெயரில் தான் நடக்கவுள்ளது. இதற்காக தான் ஐபிஎல் தொடருக்கு தொடர்ந்து ஸ்பான்சர்ஷிப் செய்வதில் இருந்து பின் வாங்கியுள்ளனர். எனினும் பாதியில் விலகாமல், ஒப்பந்த காலம் முடிந்தவுடன் விலகியது தான் நல்ல விஷயம்.