
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17ஆவது சீசன் இன்னும் 2 மாதங்களில் தொடங்கவுள்ளது. ஏற்கனவே டிசம்பர் மாதம் மினி ஏலம் முடிவடைந்த நிலையில், மார்ச் 22ஆம் தேதி ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவித்த பின்னரே, ஐபிஎல் அட்டவணையை வெளியிட ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அதனால் அணி நிர்வாகங்கள் மார்ச் முதல் வாரம் முதலே தயாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏனென்றால் ஜூன் 1ஆம் தேதி டி20 உலகக்கோப்பை தொடர் நடக்கவுள்ளதால், மே மாதத்தின் 2ஆவது வாரத்திலேயே ஐபிஎல் இறுதிப்போட்டி இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஐபிஎல் தொடருக்கான ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தை பிசிசிஐ முடித்துள்ளது.
அதன்படி 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தை சீனாவை சேர்ந்த மொபைல் நிறுவனமான விவோ வென்றது. அந்த ஒப்பந்தம் 5 ஆண்டுகளுக்கு ரூ. 2199 கோடிக்கு முடிவடைந்தது. இதனிடையே இந்தியா - சீனா இடையிலான உறவு காரணமாக, விவோ உடனான ஒப்பந்தத்தை ஐபிஎல் நிர்வாகம் முறித்து கொண்டது. இதனால் கடந்த இரு சீசன்களின் டைட்டில் ஸ்பான்சராக டாடா நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டது.