
இலங்கைக்கு எதிரான டி20 தொடரை 3-0 என இந்திய அணி முழுமையாக வென்றுள்ளது. தரம்சாலாவில் நடைபெற்ற 3ஆவது ஆட்டத்தை இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணிக்குத் தலைமை தாங்கிய ரோஹித் சர்மா, டி20 கிரிக்கெட்டில் அதிக சர்வதேச ஆட்டங்களில் விளையாடிய வீரர் என்கிற பெருமையைப் பெற்றார். மேலும் இலங்கையை வீழ்த்தி, டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 12 வெற்றிகளைப் பெற்றுள்ளது இந்திய அணி. டி20 கிரிக்கெட்டில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் அணிகளில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளைப் பெற்ற ஆப்கானிஸ்தானின் உலக சாதனையை இந்திய அணி சமன் செய்துள்ளது. இரு அணிகளும் தொடர்ச்சியாகத் தலா 12 வெற்றிகளைப் பெற்றுள்ளன.
ரோஹித் சர்மா தலைமையில் சமீபமாக நியூசிலாந்து, மே.இ. தீவுகள், இலங்கை அணிகளுக்கு எதிராக இந்திய அணி 3-0 என முழு வெற்றிகளைப் பெற்றுள்ளது. இந்த 9 வெற்றிகளுடன் அதற்கு முன்பு டி20 உலகக் கோப்பையில் கடைசியாக விளையாடிய 3 ஆட்டங்களையும் கோலி தலைமயிலான இந்திய அணி வென்றது.