
கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்துவந்த விராட் கோலி, கடைசியாக நடந்த தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடருடன் டெஸ்ட் அணியின் கேப்டன்சியிலிருந்து விலகினார்.
விராட் கோலியின் கேப்டன்சியில் 68 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய இந்திய அணி 40 வெற்றிகளை பெற்றுள்ளது. இந்தியாவில் ஆடிய 31 டெஸ்ட் போட்டிகளில் கோலியின் கேப்டன்சியில் இரண்டே இரண்டு தோல்விகள் மட்டுமே. கோலியின் கேப்டன்சியில் வெளிநாடுகளில் ஆடிய 36 டெஸ்ட் போட்டிகளில் 16 வெற்றிகளை பெற்றது இந்திய அணி.
வெளிநாட்டில் வெற்றி சதவிகிதம் 44.44 ஆகும். இதுவே வெளிநாட்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆசிய கேப்டனின் அதிகபட்ச வெற்றி விகிதம். டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியின் வெற்றி விகிதம் 58.82 ஆகும். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக வெற்றி விகிதம் கொண்ட கேப்டன்கள் பட்டியலில் 4ஆம் இடத்தை பிடித்துள்ளார். ஸ்டீவ் வாக், டான் பிராட்மேன், ரிக்கி பாண்டிங் ஆகிய மூவருக்கு அடுத்த 4ம் இடத்தில் உள்ளார் விராட் கோலி.