2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் முதல் புதிதாக 2 அணிகள் இணைக்கப்படவுள்ளதாக பிசிசிஐ அறிவித்திருந்தது. இந்த அணிகள் கொண்டு வரப்படுமானால் மற்ற அணிகளில் இருக்கும் முக்கிய வீரர்கள் வெளியேறும் வாய்ப்புகள் உள்ளதால் ரசிகர்கள் எதிர்நோக்கி உள்ளனர்.
அடுத்தாண்டு ஐபிஎல் தொடருக்காக மெகா ஏலம் நடத்தப்படவுள்ளது. இதனால் புதிதாக வரும் 2 அணிகளுக்கு சிறப்பு வசதியாக ஏலத்திற்கு முன்பாகவே 3 வீரர்கள் வரை நேரடியாக ஒப்பந்தம் செய்துக்கொள்ளலாம் என பிசிசிஐ கூறியிருந்தது. அது இந்திய வீரராகவும் இருக்கலாம் அல்லது அயல்நாட்டு வீரராகவும் இருக்கலாம். இதனால் மற்ற ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்கவைக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்ற கேள்வி பேசுப்பொருளாக இருந்தது.
இந்நிலையில் மெகா ஏலத்தின் போது ஒவ்வொரு அணியும் 4 வீரர்களை தக்கவைத்துக்கொள்ளலாம் என பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அதிகபட்சமாக 3 இந்திய வீரர்களை தக்கவைக்கலாம், 2 அயல்நாட்டு வீரர்களை தக்கவைக்கலாம். ஆனால் மொத்தமாக 4 வீரர்களை மட்டுமே அணிக்குள் வைத்துக்கொள்ள முடியும்.