
ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே அக்டோபர் 12ஆம் தேதி லக்னோ நகரில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 10ஆவது லீக் போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென் ஆப்பிரிக்கா அணியானது ஆஸ்திரேலியா அணியை 134 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதனைத்தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் குவித்தது. பின்னர் 312 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது தென் ஆப்பிரிக்க அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் திணறியது.
இறுதியில் ஆஸ்திரேலிய அணியானது 40.5 ஓவர்களில் 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் காரணமாக தென் ஆப்பிரிக்க அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.