
ஆஃப்கானிஸ்தான் அணியானது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் செப்டம்பர் 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது. இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்திருப்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இப்போட்டி தொடங்கும் முன்னரே தென் ஆப்பிரிக்க அணிக்கு மிகப்பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது அந்த அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.
அதன்படி அந்த அணியின் கேப்டன் டெம்பா பவுமா உடல்நலக்குறைவு காரணமாக ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இருந்து விலகியுள்ளார். இதன் காரணமாக முதல் ஒருநாள் போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணியை ஐடன் மார்க்ரம் வழிநடத்துவார் என்று தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இருப்பினும் அடுத்த இரண்டு போட்டிகளில் டெம்பா பவுமா மீண்டும் அணியில் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.