
டல்லாஸ்: மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் தங்களுடைய 4ஆவது வெற்றியைப் பதிவுசெய்ததுடன் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பையும் ஏறத்தாழ உறுதிசெய்துள்ளது.
மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 15ஆவது லீக் போட்டியில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சூப்பர் கிங்ஸ் அணிக்கு சமித் படேல் மற்றும் ஃபாஃப் டூ பிளெசிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சமித் படேல் ஒருபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் விளையாடிய டூ பிளெசிஸ் 12 ரன்னிலும், சாய்தேஜா முக்காமல்லா 9 ரன்னிலும், மார்கஸ் ஸ்டொய்னிஸ் ரன்கள் ஏதுமின்றியும், விக்கெட்டை இழந்தனர். அதன்பின் சமித் படேலுடன் இணைந்த ஷுபம் ரஞ்சனே இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் சமித் படேல் 38 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய டோனவன் ஃபெரீராவும் அதிரடியாக விளையாட ஸ்கோரும் உயர்ந்தது. இதில் ஷுபம் ரஞ்சனே அரைசதம் கடந்து அசத்தினார். அதன்பின் ஃபெரீரா 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 43 ரன்களிலும், ஷுபம் ரஞ்சனே 6 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 70 ரன்னிலும் என ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களைச் சேர்த்தது. நைட் ரைடர்ஸ் தரப்பில் வான் ஷால்விக் மற்றும் ஆண்ட்ரே ரஸல் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.