
அமெரிக்காவில் நடைபெற்றுவரும் இரண்டாவது சீசன் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரானது ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 7ஆவது லீக் ஆட்டத்தில் சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் மற்றும் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மொரிஸ்வில்லேவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய யூனிகார்ன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஃபின் ஆலன் 10 ரன்களிலும், ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் 11 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர்.
அதன்பின் களமிறங்கி அதிரடி காட்டிய மேத்யூ ஷார்ட் 33 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய கிருஷ்ணமூர்த்தி 17, ஜோஷ் இங்கிலிஸ், கோரி ஆண்டர்சன், ஹசன் கான் 19, ஹாரிஸ் ராவுஃப் 13 ரன்களில் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, அந்த அணி 17.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது மொஹ்சின் 4 விக்கெட்டுகளையும், டுவைன் பிராவோ, ஸியா உல் ஹக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் - டெவான் கான்வே இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்ததுடன் முதல் விக்கெட்டிற்கு 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக்கொடுத்தனர். இதில் அபாரமாக விளையாடி வந்த கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் ஒரு பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 34 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, 5 பவுண்டரிகளுடன் 32 ரன்களைச் சேர்த்த நிலையில் டெவான் கான்வேவும் காயம் காரணமாக பாதியிலேயே பெவிலியன் திரும்பினார்.