
இங்கிலாந்துக்கு எதிரான பரபரப்பான முறையில் நடைபெற்ற 2-வது டெஸ்டை 1 ரன் வித்தியாசத்தில் வென்று வரலாறு படைத்துள்ளது நியூசிலாந்து அணி. ஃபாலோ ஆன் ஆன பிறகு டெஸ்டை வென்ற 4ஆவது அணி என்கிற சாதனையைப் படைத்ததுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிநடை போட்டு வரும் இங்கிலாந்து அணியையும் வீழ்த்தி புரட்சி செய்துள்ளது.
சிட்னி 1894, ஹெடிங்லி 1981, கொல்கத்தா 2001, வெலிங்டன் 2023 என நான்கு டெஸ்டுகளில் மட்டுமே ஃபாலோ ஆன அணிகள், மீண்டு வந்து டெஸ்டில் வெற்றி பெற்றுள்ளன. அபாரமான வெற்றிகளால் வெகுவாகப் பாராட்டப்பட்ட பென் ஸ்டோக்ஸ் - மெக்குல்லம் கூட்டணி 2ஆவது தோல்வியை எதிர்கொண்டுள்ளது. கடந்த 7 டெஸ்டுகளில் இங்கிலாந்து அடைந்த முதல் தோல்வி இதுவாகும்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 2ஆவது முறையாக ஓர் அணி, 1 ரன் வித்தியாசத்தில் வென்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. மேலும் இத்தொடரின் ஆட்ட நாயகனாக கேன் வில்லியம்சனும், தொடர் நாயகனாக ஹாரி புரூக்கும் தேர்வானார்கள்.