பேட்டிங் துறை பொறுப்புடன் விளையாடியிருக்க வேண்டும் - நஜ்முல் ஹொசைன் சாண்டோ!
வலுவான இந்தியாவை தோற்கடிக்கும் அளவுக்கு தேவையான ஸ்கோரை பேட்டிங்கில் ஃபினிஷிங் செய்து கொடுக்காதது தோல்வியை கொடுத்ததாக வங்கதேச கேப்டன் நஜ்முல் ஹொசைன் சான்டோ தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 17ஆவது லீக்கில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, வங்கதேசத்துடன் மோதியது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்தது. பின்னர் 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்தது.
அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 88 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஷுப்மன் கில் அரைசதம் அடித்து 53 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த ஸ்ரேயஸ் ஐயர் 19 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
Trending
அடுத்து களமிறங்கிய விராட் கோலி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுபுறம் அவருக்கு கே.எல்.ராகுல் பக்கபலமாக இருந்தார். கடைசியில் சிக்சர் அடித்து தனது சதத்தை பூர்த்தி செய்ததுடன், ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துவைத்தார் விராட் கோலி. முடிவில் இந்திய அணி 41.3 ஓவர்களில் வெற்றி இலக்கை கடந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. விராட் கோலி 103 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 34 ரன்களும் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தனர்.
இந்நிலையில் வலுவான இந்தியாவை தோற்கடிக்கும் அளவுக்கு தேவையான ஸ்கோரை பேட்டிங்கில் ஃபினிஷிங் செய்து கொடுக்காதது தோல்வியை கொடுத்ததாக வங்கதேச கேப்டன் நஜ்முல் ஹொசைன் சான்டோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “இந்தியா எப்போதும் நல்ல வலுவான அணி என்பதை இன்று காட்டியுள்ளனர். அனைத்துமே நல்ல அணிகளாகும். நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடவில்லை என்று நினைக்கிறேன். வருங்காலங்களில் சிறப்பாக விளையாடுவோம் என்று நம்புகிறேன்.
ஷாகிப் காயத்திலிருந்து கிட்டத்தட்ட குணமடைந்துள்ளதால் அடுத்த போட்டியில் விளையாடுவார். தன்ஸித் சிறப்பாக பேட்டிங் செய்தது போலவே பவுலர்களும் செயல்பட்டனர். ஆனால் பேட்டிங்கில் நாங்கள் ஃபினிஷிங் செய்யவில்லை என்பது பிரச்சினையாகும். குறிப்பாக லிட்டன் தாஸ் இன்னும் சற்று அதிக நேரம் விளையாடியிருந்தால் இது வித்தியாசமான போட்டியாக இருந்திருக்கும். அவரைப் போலவே பேட்டிங் துறை பொறுப்புடன் விளையாடியிருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now