
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்றுள்ளது. இரண்டு போட்டிகளுமே குறைந்த ஸ்கொர் அடிக்கக்கூடிய மற்றும் சுழற்பந்து வீச்சிற்கு சாதகமானதாக இருந்தது. முதல் டி20 போட்டியில் இந்திய அணி பந்துவீச்சில் செய்த சில தவறுகளால் மட்டுமே 176 ரன்களை நியூசிலாந்து அடித்தது. மற்றபடி 130-140 ரன்கள் அடிப்பதே கடினமானது.
அதேபோல் இரண்டாவது போட்டி நடத்தப்பட்ட லக்னோ மைதானத்தில் இரு அணிகளும் 100 ரன்களை எட்டுவதற்கே மிகவும் தடுமாறின. நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 99 ரன்கள் அடித்திருந்தது. இந்த 100 ரன்கள் இலக்கை கடக்க இந்திய அணி 19.5 ஓவர்கள் எடுத்துக் கொண்டது. இரண்டாவது டி20 போட்டியில் வீசப்பட்ட 40 ஓவர்களில் 30 ஓவர்கள் சுழல்பந்து வீச்சாளர்கள் வீசினார்கள்.
இதற்கு முன்னர் 2012 ஆம் ஆண்டு வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் 28 ஓவர்கள் சுழல் பந்துவீச்சாளர்களால் வீசப்பட்டது அதிகபட்சமாக இருந்தது. தற்போது இந்தியா-நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியின் போது இது முறியடிக்கப்பட்டிருக்கிறது.