
இங்கிலாந்தின் டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் போட்டிகளில் கடந்த வருடம் ஜூலை மாதம் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். 105 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள பென் ஸ்டோக்ஸ் 2924 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், 2019 ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் 84 ரன்கள் எடுத்து அசத்தினார். உலகக் கோப்பை வெற்றியில் அவரது பங்கு சிறப்பாக இருந்தது.
ஆனால் அதன்பின் தற்போது டி20 மற்றும் டெஸ்டில் கவனம் செலுத்தி வருவதால் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். இந்நிலையில் இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணிக்கு பென் ஸ்டோக்ஸ் விளையாட வேண்டுமென தேர்வுக் குழு தலைவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியானது.
ஏனெனில் சமீபத்தில் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் போது ஓய்வை ரத்து செய்து மொயின் அலி நாட்டிற்காக வந்து விளையாடியது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பென் ஸ்டோக்ஸும் விளையாடுவாரென கிரிக்கெட் வட்டாரங்கள் கருத்துகளை தெரிவித்துவந்தன. இந்நிலையில் அதனை உறுதிசெய்யும் வகையில் இங்கிலாந்து ஒருநாள் அணிக்கு பென் ஸ்டோக்ஸ் திரும்பியுள்ளார்.