
இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் தி ஹண்ட்ரட் என்றழைக்கப்படும் 100 பந்துகள் கொண்ட கிரிக்கெட் தொடர் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 12ஆவது லீக் ஆட்டத்தில் டிரெண்ட் ராக்கெட்ஸ் - நார்த்தன் சூப்பர்சார்ஜர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற டிரெண்ட் ராக்கெட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய நார்த்தன் சூப்பர்சார்ஜர்ஸ் அணிக்கு ஆரம்பம் பேரதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் டாம் பாண்டன், மேத்யூ ஷார்ட் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, ஹாரி ப்ரூக், ஆடம் ஹோஸ் ஆகியோரும் ரன்களைச் சேர்க்காமல் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
அதன்பின் இணைந்த பிரைடன் கார்ஸ் - டேவிட் வைஸ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் டேவிட் வைஸ் அரைசதம் கடந்தார். இதன்மூலம் இன்னிங்ஸ் முடிவில் நார்த்தன் சூப்பர்சார்ஜர்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டேவிட் வைஸ் 3 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 54 ரன்களையும், பிரைடன் கார்ஸ் 33 ரன்களையும் சேர்த்தனர்.