
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் மிட்செல் மார்ஷ் 60 ரன்களிலும், ஐடன் மார்க்ரம் 53 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, அதிரடியாக விளையாடிய ஆயூஷ் பதோனியும் 30 ரன்களையும், டேவிட் மில்லர் 27ரன்களையும் சேர்த்தனர்.லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்திருந்தாலும் 203 ரன்களைக் குவித்தது. மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் கேப்டன் ஹர்திக் பாண்டியா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியில் சூர்யகுமார் யாதவ் 67 ரன்களையும், அதிரடியாக விளையாடிய நமன் தீர் 46 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் ரன்களைச் சேர்க்கவில்லை. இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.