
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தலைநகர் டெல்லி மற்றும் கட்டாக் ஆகிய நகரங்களில் நடைபெற்ற இந்த தொடரின் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற தென் ஆப்பிரிக்கா 12 போட்டிகளில் தொடர்ச்சியாக வென்று உலக சாதனையுடன் வெற்றி நடை போட்டு வந்த இந்தியாவுக்கு சொந்த மண்ணில் வரலாற்று தோல்வியை பரிசளித்து 2 – 0 என தொடரில் முன்னிலை பெற்று அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.
அதனால் தலைகுனிவை சந்தித்த இந்தியா இந்த தொடரை வெல்ல நிச்சயம் வென்றே தீரவேண்டும் என்ற நிலைமையில் களமிறங்கிய 3-வது போட்டியில் 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 179/5 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர்கள் ருதுராஜ் கைக்வாட் 57 (35) இஷான் கிசான் 54 (35) ரன்களை எடுக்க இறுதியில் ஹர்திக் பாண்டியா 31* (21) ரன்கள் எடுத்து நல்ல பினிஷிங் கொடுத்தார்.