
வரும் அக்டோபரில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் ஐபிஎல் 2022 தொடருக்குப் பின் தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்த டி20 தொடரில் பங்கேற்ற இந்தியா அடுத்ததாக வரும் ஆகஸ்ட் 27 முதல் தொடங்கும் ஆசிய கோப்பையில் விளையாட உள்ளது.
இதுவரை நடைபெற்ற டி20 தொடர்களை விட இந்த ஆசிய கோப்பையில் தான் டி20 உலகக் கோப்பையில் விளையாடப் போகும் இறுதிகட்ட அணி தேர்வு செய்யப்பட உள்ளது. அதனால் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ள இந்த தொடருக்காக அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய அணியில் விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, அரஷ்தீப் சிங் போன்ற அனுபவமும் இளமையும் கலந்த வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும் இந்த அணியில் முகமது சமி மற்றும் அக்ஷர் பட்டேல் ஆகியோர் சேர்க்கப்படாதது நிறைய முன்னாள் வீரர்களிடையே அதிருப்தியை வைத்துள்ளது. குறிப்பாக ஐபிஎல் 2022 தொடரில் குஜராத் அணியில் 16 போட்டிகளில் 20 விக்கெட்டுகளை 8.00 என்ற நல்ல எக்கனாமியில் எடுத்து கோப்பையை வெல்ல துருப்பு சீட்டாக செயல்பட்ட முகமது ஷமி இந்த அணியில் இடம் பெற்றிருக்க வேண்டும் என்று நிறைய முன்னாள் வீரர்கள் கருதுகின்றனர்.