வெற்றிக்கென எந்த ஃபார்முலாவும் கிடையாது - எம்எஸ் தோனி!
சிறந்த வீரர்களை தேர்ந்தெடுத்து அவர்களுகு உகந்த மற்றும் சௌகரியமான சூழலையும் இடத்தையும் அணிக்குள் உருவாக்கிட வேண்டும் என சிஎஸ்கே அணியின் கேப்டன் எம் எஸ் தோனி தெரிவித்துள்ளார்.
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் லீக் போட்டிகள் நாளையுடன் நிறைவடைந்து, பிளே ஆஃப் சுற்றுகள் தொடங்க உள்ளன. இன்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 223 ரன்களைக் குவித்தது. அதிகபட்சமாக கான்வே 87 ரன்களையும் ருதுராஜ் 79 ரன்களையும் துபே 22 ரன்களையும் எடுத்தனர். இதைத்தொடர்ந்து விளையாடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 146 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக வார்னர் 86 ரன்களை எடுத்தார். சென்னை அணியில் தீபக் சாஹர் 3 விக்கெட்களையும் தீக்ஷனா, பதிரானா தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
Trending
இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 12ஆவது முறையாக ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி சாதனைப் படைத்துள்ளது. அதேசமயம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விளையாடிய 14 போட்டிகளில் 5 வெற்றியை மட்டுமே பெற்று தொடரிலிருந்து வெளியேறியது.
இந்த வெற்றி குறித்துப் பேசிய சிஎஸ்கே கேப்டன் தோனி, “வெற்றிக்கென எந்த ஃபார்முலாவும் கிடையாது. சிறந்த வீரர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கான உகந்த மற்றும் சௌகரியமான சூழலையும் இடத்தையும் அணிக்குள் உருவாக்கிட வேண்டும். அதற்காக சில வீரர்கள் தங்களின் இடத்தை கூட தியாகம் செய்ய வேண்டி வரும். மேலும் அணி நிர்வாகமும் ஒரு நல்ல சூழலை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. பயிற்சியாளர்கள் குழுவும் உதவியாளர்களும் எங்களுக்கு எப்போதுமே ஊக்கமாக இருக்கிறார்கள்.
டெத் பௌலிங்கை பொறுத்தவரை வீரர்களின் தன்னம்பிக்கைதான் ரொம்பவே முக்கியம். துஷார் தேஷ்பாண்டே தொடர்ந்து அழுத்தமான சூழல்களில் பந்துவீசி தன்னை மெருகேற்றிக் கொண்டார். அவரிடம் இப்போது பெரும் தன்னம்பிக்கை இருக்கிறது. பதிரனாவிடம் டெத் ஓவர்களில் வீசுவதற்கென்றே இயல்பிலேயே ஒரு திறன் இருக்கிறது. தனிப்பட்ட ரெக்கார்டுகளை மனதில் வைக்காமல் அணியின் நலனை மட்டுமே மனதில் வைத்து ஆடும் வீரர்களை தேர்ந்தெடுப்பது முக்கியம் என நினைக்கிறேன். நாக் அவுட்களில் வெல்ல அதுதான் சரியான அம்சமாக இருக்கும்” என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now