
வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் 3 போட்டிகளின் முடிவில் 2 – 1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. இந்த தொடரில் முதல் போட்டியில் 68 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியாவுக்கு 2ஆவது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று பதிலடி கொடுத்த வெஸ்ட் இண்டீஸ் தொடரை சமன் செய்தது.
இந்நிலையில் நடைபெற்ற 3ஆவது போட்டியில் அந்த அணி நிர்ணயித்த 165 ரன்கள் இலக்கை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா 11 ரன்களில் ஆரம்பத்திலேயே காயத்தால் வெளியேறினார். இருப்பினும் அவருடன் தொடக்க வீரராக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் அவர் இல்லாத நிலைமையில் பொறுப்புடனும் அதிரடியாகவும் பேட்டிங் செய்து 8 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 76 ரன்கள் குவித்து இந்தியாவை வெற்றி பெற வைத்து ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
கடந்த 2021இல் அறிமுகமாகி கடந்த ஒரு வருடத்திற்குள் எஞ்சிய இந்திய வீரர்களைக் காட்டிலும் டி20 கிரிக்கெட்டில் அதிகபட்சமாக 4 ஆட்ட நாயகன் விருதுகளை வென்று புதிய நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ள அவர் சமீபத்திய இங்கிலாந்து டி20 தொடரின் கடைசி போட்டியில் தனி ஒருவனாக 117 ரன்கள் குவித்து வெற்றிக்காகப் போராடியது பலரின் பாராட்டுக்களைப் பெற்றது.