
நியூசிலாந்தில் விளையாடிய டி20 தொடரை வென்ற இந்தியா ஒருநாள் தொடரை இழந்தது. டி20 உலக கோப்பையில் தோல்வியை சந்திக்க முக்கிய காரணமாக அமைந்த கேப்டன் ரோஹித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் ஓய்வெடுத்த இந்த சுற்றுப்பயணத்தில் சுப்மன் கில், ஸ்ரேயஸ் ஐயர், உம்ரான் மாலிக், தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட நிறைய இளம் வீரர்கள் வாய்ப்பு பெற்று அசத்தலாக செயல்பட்டார்கள்.
இருப்பினும் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அறிமுகமானது முதலே சுமாராக செயல்பட்டு வரும் ரிஷப் பந்துக்கு இந்த சுற்றுப்பயணம் முழுவதும் ஓப்பனிங் முதல் மிடில் ஆர்டர் வரை அனைத்து இடங்களிலும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இது பெரும் விமர்சனங்களுக்கு உள்ளானது.
ஏனெனில் ஏற்கனவே நிறைய வாய்ப்புகள் பெற்று விட்ட அவர் இந்த சுற்றுப்பயணத்தில் முழுமையாக 6 போட்டிகளில் விளையாடியும் எதிலுமே 20 ரன்களை தாண்டவில்லை. மறுபுறம் காலம் காலமாக வாய்ப்புக்காக தவமாய் தவமிருந்து காத்துக் கிடக்கும் சஞ்சு சாம்சன் வழக்கம் போல இந்த சுற்றுப்பயணத்தில் 6 போட்டிகளில் வெறும் ஒரு வாய்ப்பை பெற்று அதில் 36 ரன்கள் எடுத்து சிறப்பாகவே செயல்பட்டார். இருப்பினும் 6ஆவது பவுலர் தேவை என்பதற்காக மனசாட்சின்றி நீக்கப்பட்ட அவருக்கு மற்றொரு அநீதியும் நிகழ்ந்துள்ளது.