-mdl.jpg)
ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கியுள்ள ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நாளை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்காக இரு நாடுகளை சேர்ந்த ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இவ்விரு அணிகளை பொறுத்த வரை இந்தியா பேட்டிங் துறையில் மிகவும் வலுவான அணியாக பார்க்கப்படுகிறது. மறுபுறம் தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருக்கும் பாகிஸ்தான் பந்து வீச்சு துறையில் பலமான அணியாக எதிரணிகளை மிரட்டி வருகிறது. மேலும் தற்சமயத்தில் இந்திய பேட்டிங் வரிசையில் காயமடைந்த வீரர்களால் மிடில் ஆர்டர் சற்று பலவீனமாக இருக்கிறது.
அதே போல பேட்டிங் வரிசையில் ரோஹித் சர்மா, கில், விராட் கோலி என பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் வலது கை வீரர்களாக இருப்பது மற்றொரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. எனவே இவற்றை பயன்படுத்தி நாசீம் ஷா, ஹரிஷ் ரவூப், ஷாஹீன் அப்ரிடி போன்ற தரமான வேகப்பந்து வீச்சாளர்களைக் கொண்ட பாகிஸ்தான் நிச்சயமாக வெல்லும் என்று அந்நாட்டு முன்னாள் வீரர்கள் உறுதியாக தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக 2021 டி20 உலகக்கோப்பை போல ஷாஹீன் அஃப்ரிடி புதிய பந்தை ஸ்விங் செய்து இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பெரிய சவாலை கொடுப்பார் என நிறைய முன்னாள் வீரர்கள் கணித்து வருகிறார்கள்.
இருப்பினும் அதே தரமான பவுலர்களை 2022 டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக எதிர்கொண்டு சரிந்த இந்தியாவை தனி ஒருவனாக வெற்றி பெற வைத்த விராட் கோலி இம்முறையும் பாகிஸ்தானுக்கு சவாலை கொடுப்பார் என்று இந்திய ரசிகர்கள் நம்புகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் பலமே அவர்களுடைய பவுலிங் தான் என்று தெரிவிக்கும் விராட் கோலி அதை எதிர்கொள்வதற்கு உங்களுடைய முழு திறமையை வெளிப்படுத்த வேண்டுமென கூறியுள்ளார்.