
ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 2ஆவது போட்டி டிசம்பர் 26ஆம் தேதி மெல்போர்ன் நகரில் தொடங்கியது. அந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா கடுமையாகப் போராடி முதல் இன்னிங்சில் 318 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
அதிகபட்சமாக மார்னஸ் லபுஷாக்னே 63, உஸ்மான் கவாஜா 42 ரன்கள் எடுத்த நிலையில் பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக அமீர் ஜமால் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தானுக்கு அப்துல்லா ஷபிக் 62, கேப்டன் சான் மசூத் 54 ரன்கள் எடுத்ததால் நல்ல துவக்கத்தை பெற்றது. ஆனாலும் அதன் பின் சிறப்பாக பந்து வீசிய ஆஸ்திரேலியா 264 ரன்களுக்கு பாகிஸ்தானை ஆல் அவுட் செய்தது.
ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக கேப்டன் பட் கமின்ஸ் 5 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத்தொடர்ந்து 54 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியாவுக்கு உஸ்மான் கவாஜா 0, மார்னஸ் லபுஷாக்னே 4 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை அடுத்தடுத்து ஹாஹின் அஃப்ரிடி அவுட்டாக்கி மிகப்பெரிய அச்சுறுத்தலை கொடுத்தார்.