
16ஆவது சீசன் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றை கடந்து சென்னை மற்றும் குஜராத் ஆகிய அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடவுள்ளன. இந்நிலையில் 6ஆவது கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கிய வெற்றிகரமான ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் பிளே ஆஃப் சுற்றுடன் வெளியேறியது. குறிப்பாக கடந்த வருடம் புள்ளி பட்டியலில் முதல் முறையாக கடைசி இடத்தை பிடித்த அவமானத்தை சந்தித்த அந்த அணி இம்முறை பந்து வீச்சில் ரன்களை வாரி வழங்கியும் பேட்டிங் துறையில் மிரட்டலாக செயல்பட்டு பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று எலிமினேட்டரில் லக்னோவை வீழ்த்தியது.
இருப்பினும் குவாலிஃபையர் 2 போட்டியில் குஜராத்திடம் தோற்று வெளியேறிய அந்த அணி இந்தளவுக்கு போராடி வந்ததே பாராட்டுக்குரியது என்றே சொல்லலாம். மேலும் அந்த அணிக்கு நேஹல் வதேரா, ஆகாஷ் மாத்வால் போன்ற சில வருங்கால நம்பிக்கை நட்சத்திரங்களும் இந்த சீசனில் கிடைத்தனர். அதில் முதன்மையானவராக இளம் வீரர் திலக் வர்மா மிஸ்டர் ஐபிஎல் என்றழைக்கப்படும் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவைப் போல் பேட்டிங் செய்வதாக ரசிகர்கள் பாராட்டும் அளவுக்கு சிறப்பாக செயல்பட்டு மும்பையின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார். ஹைதராபாத்தை சேர்ந்த அவர் கடந்த வருடம் 14 போட்டிகளில் 397 ரன்களை 131.02 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி அனைவரது கவனத்தை ஈர்த்தார்.
அந்த நிலையில் இந்த சீசனில் காயத்தால் முழுமையான வாய்ப்பு பெறவிட்டாலும் 11 இன்னிங்ஸில் 343 ரன்களை 164.11 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்து முன்னேறிய செயல்பாடுகளை வெளிப்படுத்திய அவர் குஜராத்துக்கு எதிரான குவாலிஃபையர் 2 போட்டியில் 43 ரன்களை 307.14 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் தெறிக்க விட்டு வெறித்தனமாக வெற்றிக்கு போராடி அவுட்டானது அனைவரும் பாராட்டுகளை பெற்றது.