
ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடப்பாண்டு முழுவதுமாக இந்தியாவில் நடைபெறவுள்ளது. அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கும் இத்தொடரானது, நவம்பர் 19ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது. ஆஃப்கானிஸ்தான் போன்ற சிறிய அணிகள் கூட இந்தியாவில் நடக்க இருக்கின்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு, தற்போது தயார் நிலையில் இருப்பதாகவே தெரிகிறது.
ஆனால் உலகக் கோப்பையை நடத்தும் பெரிய அணியான இந்திய கிரிக்கெட் அணி இன்னும் உலகக்கோப்பையை எதிர்கொள்ள ஒரு முழுமையான அணியாக தயாராகவில்லை என்பதுதான் உண்மை. 11 பேர் கொண்ட விளையாடும் இந்திய அணியில் இடம்பெறக்கூடிய வகையில் இருந்த நான்கு வீரர்களுக்கு மேல் தற்பொழுது காயமடைந்து இருப்பது, இந்திய அணி நிர்வாகத்தை வெகுவாக பாதித்திருக்கிறது.
இதன் காரணமாக முடிவுகள் எட்டப்படுவதில் தாமதம் ஏற்படுகிறது. இது ஒருபுறம் என்றால், இன்னொரு புறத்தில் திடீரென சில இளம் வீரர்கள் மிகச் சிறப்பாக செயல்பட யாருக்கு வாய்ப்பு தருவது? என்பது புதிய குழப்பத்தை உருவாக்கக் கூடியதாக இருக்கிறது. அந்தவகையில் 20 வயதான இளம் இடதுகை பேட்ஸ்மேன் திலக் வர்மா உலகக் கோப்பை இந்திய அணியில் நான்காவது இடத்திற்கான நல்ல வீரராக இருப்பார் என்று தெரிகிறது. ஆனால் அவருடைய வயது மற்றும் அனுபவத்தைக் கொண்டு பார்த்தால் வாய்ப்பு தருவதற்கு நெருடலாகவும் இருக்கிறது. தற்போது இப்படியான சூழ்நிலை தான் இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தில் நிலவுகிறது!