டிஎன்பிஎல் 2022: ரஹேஜா, முகமது அதிரடியில் திருப்பூர் தமிழன்ஸ் த்ரில் வெற்றி!
ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 6ஆவது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்றைய போட்டியில் ரூபி திருச்சி வாரியர்ஸ் - ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நெல்லையில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியின் சீனியர் தொடக்க வீரரான முரளி விஜய் அதிரடியாக பேட்டிங் ஆடி சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தார். அதிரடியாக விளையாடிய முரளி விஜய் 16 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 34 ரன்கள் அடித்தார். மற்றொரு தொடக்க வீரரான அமித் சாத்விக் 21 பந்தில் 26 ரன்கள் அடித்தார்.
Trending
முரளி விஜயின் அதிரடியால் 5.2 ஓவரில் 57 ரன்களை குவித்திருந்தது திருச்சி அணி. அந்த ஓவரின் 3ஆவது பந்தில் முரளி விஜய் ஆட்டமிழந்தார். முரளி விஜய் ஆட்டமிழந்த பிறகும் ஓரளவிற்கு ரன் வேகம் இருந்தது. 13 ஓவரிலேயே 100 ரன்களை திருச்சி அணி எட்டியிருந்தாலும் 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
அதன்பின்னர் டெத் ஓவர்களில் பெரியளவில் ரன் வரவில்லை. மதிவாணன் அதிரடியாக ஆடி 18 பந்தில் 27 ரன்களை அடித்து பங்களிப்பு செய்ய, 20 ஓவர்கள் முடிவில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி 157 ரன்களைச் சேர்த்தது.
அதன்பின் கடின இலக்கை நோக்கி களமிறங்கிய திருப்பூர் அணியின் தொடக்க வீரர்கள் சித்தார்த் 7 ரன்னிலும், கேப்டன் அனிருதா 9 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த் சுப்ரமணியன் ஆனந்த் - மான் பாஃப்னா இணை ஓரளவு பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். ஆனால் இந்த ஜோடியாலும் எதிரணி பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியவில்லை.
இதில் 35 ரன்கள் எடுத்திருந்த ஆனந்த் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 26 ரன்களில் பாஃப்னாவும் விக்கெட்டை இழந்தார். அடுத்து களமிறங்கிய சுரேஷ் குமார், ராஜ் குமார் ஆகியோரும் ஒற்றை இலக்க ரன்களோடு பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
இதையடுத்து துஷர் ரஹேஜா - முகமது இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முயற்சித்தனர். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய இருவரும் பவுண்டரிவும், சிக்சருமாக விளாசி அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர்.
இதன்மூலம் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி 18.5 ஓவர்களில் இலக்கை எட்டி, 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த துஷார் ரஹேஜா 42 ரன்களையும், முகமது 29 ரன்களையும் சேர்த்தனர்.
Win Big, Make Your Cricket Tales Now