
தமிழக கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் கோலாகலமாக தொடங்கியுள்ள ஏழாவது சீசன் டிஎன்பிஎல் டி20 தொடரில் நேற்று இரவு நடைபெற்ற 4ஆவது லீக் போட்டியில் திருச்சியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி திண்டுக்கல் இத்தொடரை வெற்றியுடன் துவங்கியுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த திருச்சி ஆரம்பம் முதலே தடுமாற்றமாக செயல்பட்டு திண்டுக்கல் அணியின் தரமான பந்து வீச்சில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 19.1 ஓவரிலேயே 120 ரன்களுக்கு சுருண்டது.
அதிகபட்சமாக தொடக்க வீரர் கங்கா ஸ்ரீதர் ராஜு 4 பவுண்டரி 2 சிக்சருடன் 48, ரன்களும் ராஜ்குமார் 1 பவுண்டரி 4 சிக்ஸருடன் 39 ரன்களும் எடுக்க திண்டுக்கல் சார்பில் அதிகபட்சமாக வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகளும், கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின், சரவணகுமார் மற்றும் சுபோத் பாத்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
அதன்பின் எளிய இலக்கை துரத்திய திண்டுக்கல் அணிக்கு தொடக்க வீரர் ஷிவம் சிங் 6 பவுண்டரி 3 சிக்சருடன் 46 ரன்களும், பாபா இந்திரஜித் 22 ரன்களும் ஆதித்யா கணேஷ் 20 ரன்களும் எடுத்து 14.5 ஓவரிலையே வெற்றி பெற வைத்தனர். மறுபுறம் பேட்டிங்கில் சுமாராக செயல்பட்டு குறைவான இலக்கை மட்டுமே நிர்ணயித்த திருச்சி அணிக்கு நடராஜன், சிலம்பரசன், அலெக்ஸாண்டர் மற்றும் ஆன்டணி தாஸ் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தும் வெற்றிக்கான முடியவில்லை.