டிஎன்பிஎல் 2023: இந்திரஜித் அபாரம்; ஸ்பார்ட்டன்ஸை வீழ்த்தியது டிராகன்ஸ்!
சேலம் ஸ்பார்ட்டன்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
டிஎன்பில் டி20 கிரிக்கெட் தொடரின் 7ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 26ஆவது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற திண்டிக்கல் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிக்கு அரவிந்த் மற்றும் கௌசிக் காந்தி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கௌசிக் காந்தி 7 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கி அதிரடி காட்டிய கவின் 4 பவுண்டரி, ஒரு சிக்சர் என 25 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான அரவிந்தும் 26 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.
Trending
பின்னர் ஜோடி சேர்ந்த சன்னி சந்து - ஹரிஹரன் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மீட்டனர். இதில் அபாரமாக செயல்பட்ட சன்னி சந்து அரைசதம் கடந்து அசத்தினார். அதேசமயம் ஹரிஹரன் 21 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதம் அடித்த சன்னி சந்து 2 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 57 ரன்களைச் சேர்த்த் ஆட்டமிழந்தார். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்களைச் சேர்த்தது.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணியில் தொடக்க வீரர் ஷிவம் சிங் 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின் விமல் குமாருடன் இணைந்த பாபா இந்திரஜித் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தார்.
அதேசமயம் மறுபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த விமல் குமார் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 42 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ஆதித்யா கணேஷும் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
இருப்பினும் தனது அதிரடி ஆட்டத்தைக் கைவிடாத பாபா இதிரஜித் அரைசதம் கடந்து அசத்தியதுடன், 9 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 83 ரன்களைச் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 18.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸை வீழ்த்தியது.
Win Big, Make Your Cricket Tales Now