டிஎன்பிஎல் 2023: மீண்டும் மிரட்டிய சாய் சுதர்சன்; ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்தது கோவை கிங்ஸ்!
சேப்பாக் சூப்பர் கில்லீஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 7ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் 9ஆவது லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கொவை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி சேப்பாக் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ஜெகதீஷன் - பிரதொஷ் பால் இணை களமிறங்கினர். இதில் ஜெகதீஷன் 4 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய சந்தோஷ் ஷிவ் 14 ரன்களுக்கும், பிரதோஷ் பால் 6 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, நட்சத்திர வீரர் பாபா இந்திரஜித்தும் 12 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
Trending
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சஞ்சய் யாதவும் 2 ரன்களில் ஆட்டமிழக்க 61 ரன்களிலேயே சேப்பாக் அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த சசிதேவ் - ஹரிஷ் குமார் இணை ஓரளவு தாக்குப்பிடித்து விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். பின் 23 ரன்களில் சசிதேவும், 32 ரன்களில் ஹரிஷ் குமாரும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய பேட்டர்களும் சோபிக்க தவறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய கோவை அணிக்கு சச்சின் மற்றும் சுரேஷ் குமார் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் சச்சின் 14 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் சுரேஷ் குமாருடன் இணைந்த நட்சத்திர வீரர் சாய் சுதர்சன் வழக்கம் போல் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சுரேஷ் குமார் 47 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த சாய் சுதர்சன் நடப்பு டிஎன்பிஎல் தொடரில் தொடர்ச்சியாக தனது மூன்றாவது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அத்துடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர் 64 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.
இதன்மூலம் லைகா கோவை கிங்ஸ் அணி 16.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. இதன்மூலம் நடப்பாண்டு டிஎன்பிஎல் தொடரில் லைகா கோவை கிங்ஸ் அணி ஹாட்ரிக் வெற்றியையும் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now