
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 7ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்றுவரும் இரண்டாவது குவாலிஃபையர் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை எதிர்த்து நெல்லை ராயல் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நெல்லை அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய திண்டுக்கல் அணிக்கு கேப்டன் விமல் குமார் - ஷிவம் சிங் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் விமல் குமார் 16 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இதையடுத்து களமிறங்கிய ஷிவம் சிங்குடன் இணைந்த பூபதி குமாரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிவம் சிங் அரைசதம் கடந்து அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பூபதி குமார் 4 பவுண்டரி, ஒரு சிக்சர் என 41 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அத்பின் களமிறங்கிய ஆதித்யா கணேஷும் 13 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதுவரை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷிவம் சிங்கும் 6 சிக்சர், 4 பவுண்டரிகள் என 76 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.