
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 7ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் 8ஆவது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் - மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய மதுரை அணிக்கு கார்த்திக் - ஹரி நிஷாந்த் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கார்த்திக் 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஹரி நிஷாந்துடன் இணைந்த ஜேகதீசன் கௌஷிக் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். பின் 24 ரன்களில் ஹரி நிஷந்த் ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜேகதீசன் கௌஷிக் 45 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
அவரைத் தொடர்ந்து வந்த வாஷிங்டன் சுந்தரும் 12 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் களமிறங்கிய ஸ்வப்நைல் சிங், தீபன் லிங்கேஷ், சுதன், முருகன் அஸ்வின், ஸ்ரீ அபிஷேக், தேவ் ராகுல் என அடுதடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் 19.3 ஓவர்களில் மதுரை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 123 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.