
தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடரின் 8ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 17ஆவது லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற சேலம் ஸ்பார்டன்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய சூப்பர் கில்லீஸ் அணிக்கு சந்தோஷ் குமார் - ஜெகதீசன் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர்.
இதில் ஜெகதீசன் 10 ரன்களுடன் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 17 ரன்களைச் சேர்த்த நிலையில் சந்தோஷ் குமாரும் ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய கேப்டன் பாபா அபாரஜித் ஒருபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்திய நிலையில், மறுமுனையில் களமிறங்கிய பிரதோஷ் ரஞ்சன் பால் 15 ரன்களுக்கும், ஆண்ட்ரே சித்தார்த் 9 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
பின்னர் களமிறங்கி அதிரடியாக விளையாடிய டேரில் ஃபெராரியோ 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 23 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பாபா அபாரஜித் 41 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதன்பின் களமிறங்கிய அஸ்வின் கிரிஸ்டும் ரன்கள் ஏதுமின்றி நடையைக் கட்டி ஏமாற்றமளித்தார்.