
விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 8ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 10ஆவது லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் - திரூப்புர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கோவையில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த மதுரை பாந்தர்ஸ் அணிக்கு கேப்டன் ஹரி நிஷாந்த் - லோகேஷ்வர் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் லோகேஷ்வர் 4 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அஜய் செட்டானும் 3 ரன்களோடு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
அவர்களைத் தொடர்ந்து கேப்டன் ஹரி நிஷாந்தும் 17 ரன்களுடன் நடையைக் கட்ட மதுரை அணியானது 35 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து களமிறங்கிய் கௌஷிக் 28 ரன்களுடனும், ஸ்ரீ அபிஷேக் 21 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் 6ஆவது விக்கெட்டிற்கு களமிறங்கிய சசிதேவ் அதிரடியாக விளையாடியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்ந்தது. தொடர்ந்து அபாரமாக விளையாடிய சசிசேத் 2 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 41 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
பின்னர் களமிறங்கிய வீரர்களில் ஸ்வப்நில் சிங் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 17 ரன்களைச் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு நடையைக் கட்டினர். இதன் காரணமாக மதுரை பாந்தர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்களை மட்டுமே எடுத்தனர். திருப்பூர் தமிழன்ஸ் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அஜித் ராம் 3 விக்கெட்டுகளையும், ரோஹித் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய திருப்பூர் அணிக்கும் எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை.