
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 8ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 20ஆவது லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு அமித் சாத்விக் - துஷார் ரஹேஜா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு அபாரமான தொடக்கத்தைக் கொடுத்தனர். இருவரும் இணைந்து தொடக்கம் முதலே பவுண்டரிகளை பறக்கவிட, இந்த இணையை பிரிக்க முடியாமல் ஸ்பார்டன்ஸ் அணி பந்துவீச்சாளர்கள் தடுமாறினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் தங்களுடைய அரைசதங்களை பதிவுசெய்து அசத்தியதுடன், முதல் விக்கெட்டிற்கு 110 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். பின்னர் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 50 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய பாலச்சந்தர் அனிருத் 17 ரன்களுக்கும், கேப்டன் சாய் கிஷோர் 12 ரன்களுக்கும், முகமது அலி 9 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டை இழக்க, மறுமுனையில் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த துஷார் ரஹேஜா 7 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 79 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
இதனைத்தொடர்ந்து களமிறங்கிய கணேஷ், மதிவானன், புவனேஷ்வரன், ராதா கிருஷ்ணன், அஜித் ராம் என அடுத்தடுத்த பேட்டர்களும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதன்மூலம் திருப்பூர் தமிழன்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்களை குவித்தது. ஸ்பார்டன்ஸ் அணி தரப்பில் குரு சாயீ மற்றும் பொய்யாமொழி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய சேலாம் ஸ்பார்டன்ஸ் அணிக்கு தொடக்கமே பேரதிர்ச்சி காத்திருந்தது.