
தமிழ்நாடு பிரீமியர் லீக் என்றழைக்கப்படும் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் இன்று சேலத்தில் கோலாகலமாக தொடங்கியது. இந்த நீசனின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் லைகா கோவை கிங்ஸ் அணியை எதிர்த்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. இப்போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய லைகா கோவை கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் சுஜய் 6 ரன்களிலும், சுரேஷ் குமார் 4 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, பின்னர் களமிறங்கிய கேப்டன் ஷாருக் கானும் 8 ரன்களில் நடையைக் கட்டி ஏமாற்றமளித்தார். இதன்மூலம் கோவை கிங்ஸ் அணியானது 24 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் இணைந்த பாலசுப்ரமணியம் சச்சின் - முகிலேஷ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர்.
இதில் இருவரும் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் முகிலேஷ் 31 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ராம் அரவிந்த் 12 ரன்களிலும், ஆதீக் உர் ரஹ்மான் 3 ரன்களிலும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இருப்பினும் மறுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய சச்சின் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.