
தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடரின் 8ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 4ஆவது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சேலத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராயல் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய, அதன்படி களமிறங்கிய சூப்பர் கில்லீஸ் அணிக்கு ஜெகதீசன் - சந்தோஷ் குமார் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 58 ரன்களைச் சேர்த்த நிலையில் சந்தோஷ் குமார் 41 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய வீரர்களில் கேப்டன் பாபா அபாரஜித் 24 ரன்களிலும், சித்தார்த் 17 ரன்களுக்கும், அபிஷேக் தன்வர் 3 ரன்களுக்கும், சதிஷ் 9 ரன்களுக்கும், ஃபெராரிரோ ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜெகதீசன் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 63 ரன்களை எடுத்து அணிக்கு உதவினார். இதன்மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 166 ரன்களைச் சேர்த்தது. ராயல் கிங்ஸ் அணி தரப்பில் சிலம்பரசன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய நேல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு அருண் கார்த்திக் - மொகித் ஹரிஹரன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அருண் கார்த்திக் 10 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஹரிஹரனுடன் இணைந்த அஜிதேஷ் குருஸ்வாமி அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. பின்னர் குருஸ்வாமி 30 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய அருன் குமாரும் 6 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதற்கிடையில் அரைசதம் கடந்து விளையாடி வந்த ஹரிஹரனும் 52 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.