
8ஆவது சீசன் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று நடைபெற்ற 9ஆவது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல்ஸ் கிங்ஸ் மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய சேலம் ஸ்பார்டன்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் அபிஷேக் 6 ரன்களிலும், கவின் 16 ரன்களிலும், பிஸ்ட் 23 ரன்களிலும், ராஜேந்திரன் விவேக் 13 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தார்.
இதையடுத்து களமிறங்கிய விஷால் வைத்யா 12 ரன்களுக்கும், ஷிஜித் சந்த்ரன் 20 ரன்களுக்கும், சன்னி சந்து 14 ரன்களுக்கும், அதான் கான் 10 ரன்களிலும், ஹரிஷ் குமார் 17 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்ப, சேலம் ஸ்பார்டன்ஸ் அணியானது 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 141 ரன்களில் ஆல் அவுட்டானது. நெல்லை அணி தரப்பில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சோனு யாதவ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். மேற்கொண்டு சிலம்பரசன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
அதன்பின் எளிய இலக்கை நோக்கி விளையாடிய நெல்லை அணிக்கும் எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் தொடக்க வீரர் மோஹித் ஹரிஹரன் ரன்கள் ஏதுமின்றி முதல் பந்திலேயே விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான கேப்டன் அருண் கார்த்திக்கும் 11 ரன்களை மட்டுமே சேர்த்து ஆட்டமிழந்தார். பின்னர் இணைந்த அஜிதேஷ் குருஸ்வாமி - நிதிஷ் ராஜகோபால் இணை ஓரளவு தக்குப்பிடித்து விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அஜிதேஷ் 45 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.