
ரசிகர்களின் பேராதரவுடன் நடைபெற்றுவரும் தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 தொடரின் 8ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு லைகா கோவை கிங்ஸ், திருப்பூர் தமிழன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் முன்னேறியுள்ளன. இந்நிலையில் இத்தொடரின் கடைசி லீக் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு விமல் குமார் - ஷிவம் சிங் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் ஷிவம் சிங் ஒருபக்கம் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். ஆனால் மறுமுனையில் களமிறங்கிய விமல் குமார் 4 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து வந்த நட்சத்திர வீரர்கள் பாபா இந்திரஜித் 6 ரன்களுக்கும், பூபதி குமார் 7 ரன்களுக்கும், சரத் குமார் 9 ரன்களுக்கும் தினேஷ் ராஜ் ஒரு ரன்னிலும், வருன் சக்ரவர்த்தி 9 ரன்களிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.
இதனால் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 96 ரன்களிலேயே 6 விகெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனாலும் மறுமுனையில் பொறுப்புடன் விளையாடி வந்த ஷிவம் சிங் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். மேற்கொண்டு அவருடன் இணைந்த ரவிச்சந்திரன் அஸ்வினும் நிதானமாக விளையாட அணியின் ஸ்கோரும் சீரான வேகத்தில் உயரத்தொடங்கியது. பின்னர் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த ஷிவம் சிங் 4 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 70 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விகெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய சுபோத் பாட்டியும் 5 ரன்களுக்கு நடையைக் கட்டினார்.