
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 8ஆவது சீசன் லீக் போட்டிகள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அந்தவகையில் இன்று நடைபெற்ற 6ஆவது லீக் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஸ்பார்டன்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து டிராகன்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு ஷிவம் சிங் மற்றும் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர்.
இதில் ஷிவம் சிங் 2 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து ரவிச்சந்திரன் அஸ்வினும் 6 ரன்களுடன் நடையைக் கட்டினார். அதன்பின் ஜோடி சேர்ந்த விமல் குமார் மற்றும் பாபா இந்திரஜித் ஆகியோர் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன் அணியின் விக்கெட் இழப்பையும் தடுத்து நிறுத்தினர். இருவரும் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் மூன்றாவது விக்கெட்டிற்கு 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட விமல் குமார் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 47 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அதேசமயம் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாபா இந்திரஜித் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த இந்திரஜித் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 51 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய பூபதி குமாரும் 8 ரன்களிலும், சரத் குமார் 05 ரன்களிலும் என அடுத்தடுத்து நடையைக் கட்டி ஏமாற்றமளித்தனர். அதன்பின் களமிறங்கிய கிஷூர் மற்றும் வருன் சக்ரவர்த்தி உள்ளிட்ட வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்துனர்.