
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 8ஆவது சீசனானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 12ஆவது லீக் போட்டியில் சேலம் ஸ்பார்டன்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற சேலம் ஸ்பார்டன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய திருச்சி அணிக்கு அர்ஜுன் மூர்த்தி - வசீம் அஹ்மத் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர்.
இதில் அர்ஜுன் மூர்த்தி 11 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 19 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முகமது வசீமும் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய ஷயாம் சுந்தர் - ஜாஃபர் ஜமால் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் அதிரடியாக விளையாட முயற்சித்த ஷயாம் சுந்தர் 19 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, திருச்சி அணி 54 ரன்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர் ஜாஃபருடன் இணைந்த சஞ்சய் யாதவ் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். இருவரும் இணைந்து 77 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் ஜாஃபர் ஜமால் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனாலும் மறுபக்கம் அபாரமாக விளையாடிய சஞ்சய் யாதவ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 4 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 68 ரன்கள் எடுத்த நிலையில் சஞ்சய் யாதவும் ஆட்டமிழந்தார்.