
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வந்த தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசனானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 24ஆவது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய திண்டுக்கல் அணிக்கு விமல் குமார் மற்றும் ஷிவம் சிங் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய விமல் குமார் மூன்று பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்கள் என 23 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். ஆனால் மறுமுனையில் பொறுப்புடன் விளையாடிய ஷிவம் சிங் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
ஆனால் மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய பாபா இந்திரஜித் 4 பவுண்டரிகளுடன் 29 ரன்களிலும், அடுத்து வந்த சரத் குமார் 3 பவுண்டரிகளுடன் 19 ரன்களிலும், கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் 3 ரன்களிலும், பூபதி குமார் ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். ஆனாலும் மறுமுனையில் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷிவம் சிங் 56 பந்துகளில் சதமடித்து மிரட்டினார்.