
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வந்த தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் நடப்பு சாம்பியன் லைகா கோவை கிங்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் உள்ளிட்ட அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின. இதில் இன்று நடைபெற்ற முதல் குவாலிஃபைய ஆட்டத்தில் ஷாருக் கான் தலைமையிலான லைகா கோவை கிங்ஸ் அணியும், சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற திருப்பூர் தமிழன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு அமித் சாத்விக் மற்றும் துஷார் ரஹேஜா ஆகியோர் சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்ததுடன், அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக்கொடுத்தனர். இப்போட்டியில் தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்ததுடன், முதல் விக்கெட்டிற்கு 105 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். அதன்பின் 8 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 55 ரன்கள் எடுத்திருந்த நிலையில் துஷார் ரஹேஜா விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த மற்றொரு தொடக்க வீரரான அமித் சாத்விக்கும் ஒரு பவுண்டரி, 7 சிக்ஸர்கள் என 67 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அதன்பின் இணைந்த பாலச்சந்தர் அனிருத் - முகமது அலி இணையும் ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அனிருத் 21 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து முகமது அலியுடன் இணைந்த கேப்டன் சாய் கிஷோரும் நிதானமாக விளையாட அணியின் ஸ்கோரும் 200 ரன்களை எட்டியது. இதன்மூலம் திருப்பூர் தமிழன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களைக் குவித்தது.